News

நாட்டிலுள்ள சாரதிகளுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!

அதிகவேக நெடுஞ்சாலையில் பயணிப்போர் வீதி விதிமுறைகளை மீறி வாகனத்தை செலுத்த வேண்டாம் என காவல்துறை ஊடகப் பேச்சாளாரும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலை விபத்துக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,“ நாட்டில் மூன்று பிரதான அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளன. அவை தெற்கு அதிகவேக நெடுஞ்சாலை, வெளிச்சுற்றுவட்ட அதிகவேக நெடுஞ்சாலை மற்றும் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ஆகியனவாகும்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இந்த மூன்று பிரதான அதிகவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அத்துடன் இந்த விபத்துக்கள் இடம்பெற இரண்டு பிரதான காரணங்கள் என காவல்துறையினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறிப்பாக கவனயீனமான முறையிலும் சாரதி அதிக களைப்புடனும் வாகனம் செலுத்துகின்றமை இந்த விபத்துக்கள் இடம்பெற காரணமாகும்.

அதிகவேக நெடுஞ்சாலையில் பயணிப்போர் வீதி விதிமுறைகளை மீறி வாகனத்தை செலுத்த வேண்டாம். குறிப்பாக சாதாரண வீதிகளில் பயணிப்பதை விட நாம் அதிவேக நெடுஞ்சாலையில் அதிக வேகத்துடன் பயணிக்கிறோம்.

இதன்போது விபத்து ஏற்பட்டால் அது பாரதூரமான விபத்தாக மாறலாம். அதேபோன்று உயிர் ஆபத்து ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது. எமது அவசரம் பேராபத்தை விளைவிக்கும்.

எனவே, சாரதிகள் அதி வேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நாம் கோரிக்கை விடுக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button