நாட்டின் சில பிரதேசங்களில் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம்!
நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (06)அவ்வப்போது மழைபெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (06) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை மன்னார் மாவட்டத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சூரியனின் தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
அதற்கிணங்க இன்று(06) நண்பகல் 12.09 அளவில் மக்கோன, பதுரெலிய, கொடகவெல, கித்துள்கோட்டே மற்றும் மீகஹவெரலிய ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.