உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு நேரடி தகுதி கிடைக்குமா?
இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள 50 ஓவர் ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக பங்குபற்றும் இலங்கையின் வாய்ப்பு ஊசலாடிக்கொண்டிருக்கும் நிலையில் பல்லேகலையில் இன்று புதன்கிழமை (30) நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ண சுப்பர் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை சந்திக்கவுள்ளது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையினால் தடைப்பட்டு கைவிடப்பட்டதால் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக பங்குபற்றுவதற்கு ஆப்கானிஸ்தான் 7ஆவது நாடாக தகுதிபெற்றது.
வரவேற்பு நாடு என்ற வகையில் இந்தியா, உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற இயல்பாகவே தகுதிபெற்றுக்கொண்டது. சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் 2ஆம் இடத்திலிருந்து 7ஆம் இடம்வரை முறையே இருக்கும் இங்கிலாந்து (125 புள்ளிகள்), நியூஸிலாந்து (125), அவுஸ்திரேலியா (120), பங்களாதேஷ் (120), பாகிஸ்தான் (120), ஆப்கானிஸ்தான் (115) ஆகிய 6 நாடுகளும் நேரடியாக உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றுவிட்டன.
எட்டாவதாக தகுதிபெறப் போகும் அணி எது என்பதற்கான போட்டி மேற்கிந்தியத் தீவுகள் (88 புள்ளிகள் ), அயர்லாந்து (68), இலங்கை (67), தென் ஆபிரிக்கா (59) ஆகிய நாடுகளுக்கு இடையில் நிலவுகிறது.
இந் நிலையில் பல்லேகலையில் இன்று நடைபெறவுள்ள மூன்றவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆப்கானிஸ்தானை இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.
இத் தொடரில் 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கும் ஆப்கானிஸ்துடனான தொடரை சமப்படுத்துவது இலங்கைக்கு உள்ள மற்றொரு சவாலாகும்.
இது இவ்வாறிருக்க, நியூஸிலாந்துக்கு எதிராக அடுத்த வருடம் நியூஸிலாந்தில் 3 போட்டிகள் கொண்ட சுப்பர் லீக் தொடர் நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தானுடனான இன்றைய போட்டியிலும் நியூஸிலாந்துடான 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் இலங்கைக்கு மேலும் 40 புள்ளிகள் கிடைக்கும். அதற்க அமைய இலங்கையினால் அதிகப்பட்சமாக 107 புள்ளிகளைப் பெறக்கூடியதாக இருக்கும். ஆனால், நியூஸிலாந்துடனான தொடரில் இலங்கையினால் முழுமையாக வெற்றிபெறமுடியுமா என்பது சந்தேகமே.
மேற்கிந்தியத் தீவுகள் தனது சுப்பர் லீக் போட்டிகளைப் பூர்த்தி செய்துவிட்ட நிலையில் அயர்லாந்துக்கு பங்களாதேஷுடன் 3 போட்டிகளும், தென் ஆபிரிக்காவுக்கு அவுஸ்திரேலியாவுடன் 3 போட்டிகளும் இங்கிலாந்துடன் 3 போட்டிகளும் நெதர்லாந்துடன் 2 போட்டிகளுமாக மொத்தம் 8 போட்டிகள் மீதமுள்ளன. அவற்றில் 5 போட்டிகளில் வெற்றிபெற்றால் அதிகப்பட்சமாக 109 புள்ளிகளுடன் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட தென் ஆபிரிக்கா நேரடி தகுதிபெற்றுவிடும்.
உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதிபெறத் தவறும் மற்றைய நாடுகள், பிரிதொரு தகுதிகாண் சுற்றில் விளையாடவேண்டிவரும்.