மோசடி ஆவணங்களை தயார் செய்து யானைகளை வைத்திருந்த விவகாரம் : யானைகள் பதிவுப் புத்தகத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு பதிவாளருக்கு உத்தரவு
யானை புத்தகம் என பரவலாக அறியப்படும் யானைகளை பதிவு செய்யும் புத்தகத்தை உடனடியாக மேன் முறையீட்டு நீதிமன்றில் ஒப்படைக்குமாறு, கொழும்பு மேல் நீதிமன்ற பதிவாளருக்கு நேற்று (2) உத்தரவிடப்பட்டது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமே இதற்கான உத்தரவை பிறப்பித்தது.
கடந்த 2021 ஆகஸ்ட் 19 ஆம் திகதி, அப்போதைய வன ஜீவிகள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியானது, சட்ட விரோதமாக யானைகளை பிடித்து பதிவு செய்துகொள்ளவும், அதனை மையப்படுத்திய கடத்தல்களை ஊக்குவிக்கவும் வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் அதனை ரத்து செய்து உத்தரவிடுமாரும் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு நேற்று (02) பரிசீலனைக்கு வந்தது. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இயற்கை மற்றும் கலாசார கல்வி மையம் மற்றும் விலங்களுக்கான நீதி எனும் அமைப்பு, சுற்றுச் சூழல் நீதிக்கான மையம், அதன் தலைவர் ஹேமந்த விதானகே மற்றும் விலங்கியல் ஆர்வலர்களான பத்ரகொட கங்கானம்லாகே திலேனா, பஞ்சாலி மதுரங்கி பனாபிட்டிய, மகேஷி நளின்கா முனசிங்க, வாத்துவகே விஷாகா பெரேரா திலகரத்ன ஆகியோர் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
வனஜீவிகள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, வன ஜீவிகள் பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார, தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நயகம், சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விஷேட விசாரணைப் பிரிவு (01) பொறுப்பதிகாரி, பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, கொழும்பு மேலதிக நீதிவான் எஸ். பிரபாகரன், மாத்தளை நீதிவான் சி.விக்ரமநாயக்க மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக இந்த மனுவில் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் மனு பரிசீலிக்கப்பட்ட போது, யானைகளை பதிவு செய்யும் முறைமையை பரிசீலிப்பது அவசியம் என தீர்மானித்த மேன் முறையீட்டு நீதிமன்றம், அதற்காக யானைகள் பதிவுப் புத்தகத்தை மேன் முறையீட்டு நீதிமன்றில் ஒப்படைக்க உத்தரவிட்டது.
குறித்த புத்தகம் கொழும்பு மேல் நீதிமன்ற பொறுப்பில் இருப்பதாக நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், நேற்றிலிருந்து 10 நாட்களுக்குள் அப்புத்தகத்தை மேன் முறையீட்டு நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டும் என கொழும்பு மேல் நீதிமன்ற பதிவாளருக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.