வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தில் திருத்தம்?
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தில் திருத்தம் செய்யவும், தற்போதுள்ள விதிகளை கடுமையாக்கவும் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் ஆட்கடத்தலை தடுக்கும் நோக்கிலும், புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் நோக்கிலும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் கண்காணிப்பினை பெறுவதற்கான விசேட கூட்டத்தில் ஆட்கடத்தல் தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மேலும் கடுமையாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஆட்கடத்தலைத் தடுக்கும் உத்தியாக, வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் நபர்களின் தகவல்களை டிஜிட்டல் மயமாக்கும் அமைப்பின் மூலம் தகவல்களை தரவு அமைப்பில் பதிவு செய்யத் தீர்மானித்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்திற்கு புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்துவது மற்றும் புதிய திருத்தங்களைச் செய்வது தொடர்பான பல முன்மொழிவுகளை ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணி சமர்ப்பித்ததாக பணியகம் தெரிவித்துள்ளது.