IMF கடனுதவி இலங்கைக்கு எப்போது கிடைக்கும்… அரசு வெளியிட்ட தகவல்
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படவுள்ள கடனின் முதலாம் தவணை கிடைக்கும் திகதி வெளியானது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படவுள்ள கடன் தொகையின் முதல் தவணை இந்த மாதம் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மார்ச் மாதம் 20 ஆம் திகதி இந்த கடன் பெற்றுக்கொள்ளப்படும் என சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை தொகை விரைவில் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலரினை சர்வதேச நாணய நிதிய நிறைவேற்று சபை எதிர்வரும் மார்ச் 20இல் அங்கீகாரமளித்தால், மார்ச் 22ல் முதல் கட்ட நிதியாக 330 மில்லியன் டொலர் தொகை வழங்கப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.