இலங்கைக்கு உலகவங்கி அளித்துள்ள ஆதரவு!
இலங்கையில் விவசாயத் துறைக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்கான உதவியை மேலும் 18 மாதங்களுக்கு நீடிக்க உலக வங்கி இணங்கியுள்ளது.
இலங்கைக்கான உலக வங்கிக் குழுவின் குழுத் தலைவர் ஜோன் கெய்சர், வேளாண் விஞ்ஞானி கரிஷ்மா வாஷ் மற்றும் சிரேஷ்ட நடவடிக்கை அதிகாரி அசேல திஸாநாயக்க ஆகியோர் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடினர்.
இந்த விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டம் தற்போது பாரிய பங்களிப்பை ஆற்றி வருவதால், இத்திட்டத்தை மேலும் நாட்டுக்கு வழங்குமாறு உலக வங்கிக் குழுவிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
அதன்படி, இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து மேலும் 18 மாதங்களுக்கு இந்தத் திட்டத்தைப் பராமரிக்க 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு ஒப்புக்கொண்டது.
இலங்கையில் பாரம்பரிய விவசாயத்திற்கு பதிலாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய உற்பத்தியை அதிகரிக்க தனது அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக கருத்து தெரிவித்த உலக வங்கி குழுவின் குழு தலைவர் ஜோன் கேசர் தெரிவித்தார்.