உயர்கல்விக்காக 11 இலட்சம் ரூபா வட்டியில்லா கடன்..!
இலங்கையில் உயர்கல்வி பெற காத்திருக்கும் மாணவர்களுக்காக புதிய திட்டமொன்றை கொண்டுவரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன்படி குறித்த மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்குவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வியை தொடர போதிய வசதியற்ற தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதற்காக இந்த கடன் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின்கீழ் பாடநெறிக்காக 8 இலட்சம் ரூபாவும், நாளாந்த செலவுகளுக்காக 3 இலட்சம் ரூபாவும் என மொத்தமாக 11 இலட்சம் ரூபாவை மாணவரொருவர் கடனாக பெற முடியும்.
ஐந்து வருட கடன் திட்டமாக இது காணப்படும். இந்த கடனுக்கான வட்டியில் பாதியை மாணவர்கள் செலுத்துவதெனவும், மிகுதியை அரசாங்கம் செலுத்துவதெனவும் முன்னதாக யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
எனினும் இது தொடர்பில் அதிபர் தலையீடு செய்து மொத்த வட்டியையும் அரசாங்கமே செலுத்தும் எனவும் மாணவர்கள் கடன் தொகையை மாத்திரம் செலுத்தும் வகையிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.
இதனை தொடர்ந்தே வட்டியற்ற இந்த கடன் திட்டத்தை கொண்டு வர தீர்மானம் எட்டப்பட்டது. சுமார் ஐயாயிரம் மாணவர்கள் இந்த கடன் திட்டம் மூலம் பயனடையவுள்ளனர்.
முதலில் இந்த கடன் திட்டத்தை இலங்கை வங்கியில் மாத்திரம் கொண்டு வருவதற்கான யோசனையே முன்வைக்கப்பட்டிருந்த போதும் தற்போது மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி உள்ளிட்ட வங்கிகளிலும் கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த கடன் திட்டத்திற்கு உலகளவில் அதிக கேள்வி உள்ள பாடநெறிகளை தெரிவு செய்யும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
அதிலும் தொழிநுட்பம் சார்ந்த பாடநெறிகளை தெரிவு செய்யும் மாணவர்கள் இந்த கடன் திட்டத்தை பெறுவதற்கான முதன்மை உரிமையை பெறுவார்கள்.
இந்த கடனை அவர்கள் உயர் கல்வியை நிறைவு செய்து தொழிலுக்கு சென்றதன் பின்னர் திருப்பிச் செலுத்த முடியும்.
எனவே இது தொடர்பான யோசனையானது அடுத்த வாரமளவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். வெகுவிரைவில் இந்த திட்டம் இலங்கை நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.