காணி உரிமைப் பத்திரங்களை வழங்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்துவதற்கான அமைச்சரவை குழு நியமனம்!
அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்காகக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் காணி உரிமைப் பத்திரங்களை வழங்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்துவதற்கு அமைச்சரவை மட்டத்திலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற சுற்றுலா மற்றும் காணி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளுக்கான உரிமைப் பத்திரங்கள் பல வருடங்களாக வழங்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருவதாகப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் நோக்கில் அமைச்சர் இந்தக் குழுவை நியமித்துள்ளார்.
இதுவரை வழங்காதுள்ள காணி உரிமைப் பத்திரங்களை விரைவில் வழங்கி முடிப்பதற்கு ஜனாதிபதி எதிர்பார்த்திருப்பதாகவும், பூர்த்திசெய்யப்பட்டுள்ள காணி உரிமைப் பத்திரங்களை விரைவில் வழங்குவது குறித்து முடிவெடுக்க இவ்வாரம் இக்குழு கூடவிருப்பதாகவும் அமைச்சர் இங்குத் தெரிவித்துள்ளார்.
வடபகுதியில் உள்ள காணிப் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு வடபகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்துக் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.