IPL – இம்முறை 5 புதிய விதிகள் அறிமுகம்!
ஐபிஎல் தொடரில் இம்முறை 5 புதிய விதிமுறைகள் அறிமுகமாகின்றன. போட்டிகளை சுவாரஸ்யமாக்கும் வகையில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய விதிகளின் விவரம்..
‘இம்பேக்ட் பிளேயர்’: ஐபிஎல் தொடரில் முறை ‘இம்பேக்ட் பிளேயர்’ என்ற புதிய விதியும் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்படி டாஸ் வென்ற பின் வழங்கப்படும் 11 வீரர்கள் அடங்கிய பட்டியலுடன் மாற்று வீரர்கள் 5 பேரின் பெயர்களையும் வழங்க வேண்டும். இதில் இருந்து ஒரு வீரரை ஆட்டத்தின் நடுவே பந்து வீச்சிலோ, அல்லது பேட்டிங்கிலோ மாற்று வீரராக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த வகையில் ஏற்கெனவே 4 வெளிநாட்டு வீரர்கள் களத்தில் இருந்தால் இம்பேக்ட் பிளேயர் விதிமுறையின் கீழ் வெளிநாட்டு வீரரை களமிறக்க முடியாது. இதனால் இந்திய வீரரரைதான் களமிறக்க முடியும். அதேவேளையில் களத்தில் 3 வெளிநாட்டு வீரர்கள் இருந்தால் புதிய விதிமுறையின்படி மற்றொரு வெளிநாட்டு வீரரை களமிறக்கலாம். மாற்று வீரராக வெளியே செல்பவர் மீண்டும் தனது பங்களிப்பை வழங்க முடியாது.
‘இம்பேக்ட் பிளேயர்’ விதியை களநடுவரிடம் தகவல் தெரிவித்துவிட்டு விக்கெட் விழும்போதோ அல்லது பேட்ஸ்மேன் காயம் அடையும் போது பயன்படுத்தலாம். முக்கியமான இந்த விதியை 14வது ஓவருக்கு முன்பாக பயன்படுத்த வேண்டும். மாற்று வீரராக வெளியே செல்பவர் 4 ஓவர்களை வீசியிருந்தாலும் ‘இம்பேக்ட் பிளேயர்’ விதிமுறையின் கீழ் உள்ளே வரும் வீரர் முழுமையாக 4 ஓவர்கள் பந்து வீச முடியும், பேட்டிங் செய்ய முடியும்.
குறிப்பாக சென்னை அணியில் அஜிங்க்ய ரஹானே விரைவாக ஆட்டமிழந்து விட்டால் அவருக்கு பதிலாக ‘இம்பேக்ட் பிளேயர்’ விதிமுறையின் கீழ் ஷிவம் துபே களமிறக்கப்பட்டால் அவர், பேட்டிங் செய்யவும் முடியும். பந்து வீச்சிலும் பங்களிப்பு செய்ய முடியும்.
‘வீரர்கள் பட்டியல்’: வழக்கமாக டாஸ் வீசுவதற்கு முன்பாக விளையாடும் 11 வீரர்களை தேர்வு செய்து நடுவரிடம் பட்டியலை கொடுக்க வேண்டும். ஆனால் ஐபிஎல் தொடரில் இம்முறை டாஸ் வென்ற பிறகு அதற்கு தகுந்தபடி விளையாடும் 11 வீரர்களை தேர்வு செய்து கொள்ளும் புதிய விதிமுறை அறிமுகம் ஆகிறது. மற்றொரு திருப்பமாக நடுவரிடம் விளையாடும் 11 வீரர்களின் பட்டியலை வழங்கிய பின்னரும் மாற்றம் செய்யலாம். ஆனால் இதற்கு எதிரணியின் கேப்டன் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.
‘வைடு, நோபாலுக்கும் வந்தாச்சு’: கள நடுவர் வழங்கும் வைடு, நோ-பால் ஆகியவற்றை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். இந்த விதிமுறை சமீபத்தில் முடிவடைந்த மகளிருக்கான பிரிமீயர் லீக்கில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. தற்போது இது ஐபிஎல் தொடரிலும் அறிமுகம் ஆகிறது.
‘நகர்ந்தால் 5 ரன் போச்சு’: பேட்ஸ்மேன்கள் பந்தை அடிப்பதற்கு முன்னரே அவர்களது நகர்வுகளை கணித்து அதற்கு தகுந்தவாறு விக்கெட் கீப்பர் இடது புறமோ அல்லது வலது புறமோ சற்று நகர்வார். இதற்கு தற்போது அபராதம் விதிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பரின் நகர்வுகள் விதிமுறைக்கு மாறாக இருப்பதை களநடுவர் கண்டறிந்தால்பந்தை டெட்பால் என அறிவிக்கலாம். அல்லது வைடு என்றோ, நோபால் என்றோ அறிவித்து ஒரு ரன்னை அபராதமாக விதிக்கலாம். இல்லையென்றால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்களை கொடுக்கலாம்.
‘நேரத்தை வீண் செய்தால் அவ்வளவுதான்’: நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களையும் 90 நிமிடங்களுக்குள் வீசி முடிக்க வேண்டும். ஒவ்வொரு ஓவரையும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் வீசி முடிக்க வேண்டும். இல்லையென்றால் வெளிவட்டத்துக்குள் 5 பீல்டர்களுக்கு பதிலாக 4 பீல்டர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும். இது இறுதிக்கட்ட ஓவர்களில் பந்து வீச்சாளர்களுக்கு பாதகமாக இருக்கக்கூடும்.