News

வடக்கு கிழக்கில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் – 2024க்குள் நடைமுறை

வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்துக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டத்தை பார்வையிட்டதுடன், அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.

தற்போதைய நிலைவரம் மற்றும் விஸ்தரிப்புக்கான தேவைப்பாடுகள் பற்றியும் அமைச்சர் கேட்டறிந்தார். அதன்பின்னரே மேற்படி அறிவிப்பை விடுத்தார்.

அத்துடன், கிளிநொச்சி வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கடல் நீரை சுத்திகரித்து நன்னீராக்கும் திட்டத்தையும் அமைச்சர் பார்வையிட்டார்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கரவெட்டி, கொடிகாமம் மற்றும் புத்தூர் என பல பிரதேசங்களுக்கு இந்த திட்டத்தின் ஊடாக குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

” மேற்படி நீர்வழங்கல் திட்டத்தை 2023 ஏப்ரலில் முடிவுறுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை மற்றும் பணவீக்கத்தால் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

எனினும், 2024 முற்பகுதிக்குள் இத்திட்டத்தை முழுமைப்படுத்த எதிர்பார்க்கின்றோம். அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் செயல் திட்ட முகாமையாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இத்திட்டம் ஊடாக 3 இலட்சம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும்” – எனவும் அமைச்சர் இதன்போது கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button