உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 50% குறைப்பு
புதிய எல்லை நிர்ணய அறிக்கையில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 50% குறைக்கப்பட்டுள்ளது.
புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் பிரகாரம் இலங்கையின் உள்ளூராட்சி சபைகளின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 4,714 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான தேசிய குழுவின் அறிக்கையின் ஆரம்ப வரைவு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.
புவியியல் அளவு மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி நிர்ணயம் பூர்வாங்க வரைவில் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், அந்த வரைவு விரைவில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அரசியல் கட்சியின் செயலாளர்களுக்கு அனுப்பப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதத் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இந்த அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டிய முன்மொழிவுகளை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளன.
இறுதி அறிக்கையை தயாரிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அறிக்கையில் உள்ளடக்கப்படுவதற்கான முன்மொழிவுகள் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை பரிசீலிக்கப்படும் என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.