இலங்கைக்கு பேரிடி – உருவாகிய புதிய சிக்கல்..!
இறையாண்மை பத்திரங்களைச் செலுத்தாமை தொடர்பில், இலங்கைக்கு எதிராக நியூயோர்க்கின் தெற்கு மாவட்டத்தில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில், ஹமில்டன் ரிசர்வ் வங்கியால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கத் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஏப்ரல் 20ஆம் திகதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஹமில்ட்ன் வங்கியினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யக்கோரும் பதில் மனு கடந்த 7ஆம் திகதியன்று நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஏப்ரல் 20ஆம் திகதியன்று இலங்கை தரப்பு தமது வாதத்தை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹமில்டன் ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் திகதி இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 25 அன்று செலுத்த வேண்டிய 1 பில்லியன் அமெரிக்க டொலர் ஐஎஸ்பியை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற பதிவுகளின்படி, இலங்கை மொத்தமாக 257,539,331.25 அமெரிக்க டொலர்கள் அசல் மற்றும் வட்டியைச் செலுத்த வேண்டியுள்ளது.