காலி முகத்திடலில் புதிய தடை – எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்..!
காலி முகத்திடலில் சமய நிகழ்வுகள் தவிர வேறு எந்த நிகழ்வுகளுக்கும் இடமளிக்காதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அதன்படி, இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்களை காலி முகத்திடலில் நடத்த இடமளிக்கப்படமாட்டாது. எதிர்வரும் 20 ஆம் திகதிமுதல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இந்தநிலையில், பொதுமக்கள் சுதந்திரமாக நேரத்தை செலவிடுவதற்கு மட்டும் காலி முகத்திடல் மைதானத்தை அனுமதிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
சமூகப் பொறுப்பு நிதியத்தின் கருத்திட்டமாக காலிமுகத்திடலை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபை பொறுப்பேற்றுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக குறித்த அதிகாரசபை 220 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.
கடந்த (அரகலய) போராட்ட காலங்களில் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களைப் புதுப்பிப்பதற்காக மாத்திரம் 6.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
எனினும், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் மற்றும் வேறு பல செயற்பாடுகளால் காலி முகத்திடல் தொடர்ந்து சேதமடைந்து வருவதால், அதன் அழகை பேணிப்பாதுக்காக்கும் நோக்கில் அமைச்சரவை மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளது.