ஆசிரியர் இடமாற்றம் – கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
முறையான ஆசிரியர் இடமாற்ற சபைகளினால் ஆசிரியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இடமாற்றங்கள் இரத்துச் செய்யப்படமாட்டாது எனவும் கல்வி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் சகல விடயங்களையும் கருத்திற்கொண்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கடமைகளை வழங்காமல் இருக்க அதிபர்களால் முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2017ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பேச்சாளர் தெரிவித்தார்.
இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், தெரிவிக்கையில், நான்கு பிரபல பாடசாலைகளின் அதிபர்கள் ஒன்றிணைந்து முழு இடமாற்றத்தையும் குளறுபடியாக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் கடமையாற்றும் அதிபர்கள் தமக்கு நட்பாகப் பழகும் சொற்ப எண்ணிக்கையிலான ஆசிரியர்களை வியாபார நோக்கில் பாடசாலைகளில் தக்கவைத்துக் கொள்ள முயல்வதாகவும் அவர்களுடன் சேர்த்துக் கொண்டு இந்த குளறுபடியை செய்வதாகவும் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு சில தலைமையாசிரியர்கள் கையொப்பமிட்டு, ஆசிரியர் பணி மாறுதல் நடைமுறையை நிறுத்தக்கோரி மனு அளித்தும், பெரும்பான்மையான தலைமையாசிரியர்கள் கையெழுத்திடவில்லை என்றும் ஸ்டாலின் கூறினார்.