News

ஸ்மார்ட் ஃபோன்கள் இனி இல்லை!

புதிய மின்னணு சாதனங்களை உருவாக்க விலைமதிப்பற்ற உலோகங்களை பூமியிலிருந்து புதிதாக வெட்டியெடுப்பதை நீடிக்க முடியாது என்பதால், மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

2021-ஆம் ஆண்டில் மட்டும் உலகில் தூக்கி வீசப்பட்ட மின்னணு கழிவுகளின் எடை 57 மில்லியன் டன்கள் என்று ஓர் ஆய்வு மதிப்பிட்டுள்ளது.

ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி (RSC) கூறுகிறது. பூமியிலுள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டியெடுப்பதைவிட, அந்த மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான உலகளாவிய முயற்சி இப்போது அவசியம்.

உலகளாவிய நெருக்கடிகள் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான விநியோக சங்கிலிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. நுகர்வோர் தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து விலைமதிப்பற்ற உலோகங்களையும் மறுசுழற்சிக்கு உள்ளாக்குவது நிலைத்தன்மைக்கு வழிவகுக்கும் என்றும் அதுகுறித்த கவனத்தை ஈர்க்கவும் ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி ஒரு முன்முயற்சியை எடுத்து வருகிறது.

யுக்ரேன் போர் உட்பட புவிசார் அரசியலில் நிலவும் அமைதியின்மை, மின்சார வாகன பேட்டரிகளில் உள்ள நிக்கல் போன்ற முக்கிய உலோகப் பொருட்களின் விலையில் பெரும் ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அது சுட்டிக்காட்டுகிறது.

தனிமங்களுக்கான சந்தையில் நிலவும் இந்த ஏற்ற இறக்கம், மின்னணு உற்பத்தியைச் செயல்படுத்தக்கூடிய “விநியோக சங்கிலிகளில் குழப்பத்தை” ஏற்படுத்தும். இது, தேவை அதிகரிப்பதுடன் இணைந்து, பேட்டரி தொழில்நுட்பத்தில் மற்றொரு முக்கிய அங்கமான லித்தியத்தின் விலையை 2021 மற்றும் 2022-க்கு இடையில் கிட்டத்தட்ட 500% அதிகரிக்கச் செய்துள்ளது.
“நம்முடைய தொழில்நுட்ப நுகர்வு பழக்கங்கள் மிகவும் நீடிக்க முடியாதவை. அந்த பழக்கங்கள் சுற்றுச்சூழல் சேதங்களைத் தொடர்ந்து அதிகரிக்கின்றன. அதோடு நமக்குத் தேவையான மூலப் பொருள்கள் தீர்ந்துவிடும் அபாயமும் உள்ளது,” என்று ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி தலைவர் பேராசிரியர் டாம் வெல்டன் கூறினார்.

ஸ்மார்ட்ஃபோனில் உள்ள உலோகங்களில், அடுத்த நூற்றாண்டில் தீர்ந்துபோகக் கூடியவை:
கேலியம்: மருத்துவ வெப்பமானிகள், எல்இடிகள், சோலார் பேனல்கள், தொலைநோக்கிகள் ஆகியவற்றில் பயன்படுத்துகிறது. புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

ஆர்சனிக்: பட்டாசுகளில், மரப் பாதுகாப்பாளராகப் பயன்படுத்தப்படுகிறது.
வெள்ளி: கண்ணாடிகள், சூரிய ஒளியில் கருமையாக்கும் எதிர்வினை லென்ஸ்கள், பாக்டீரியா எதிர்ப்பு ஆடைகள் மற்றும் தொடுதிரைகளில் பயன்படுத்தக்கூடிய கையுறைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

இண்டியம்: டிரான்சிஸ்டர்கள், மைக்ரோசிப்கள், ஃபயர்-ஸ்பிரிங்க்லர் கட்டமைப்புகளில், ஃபார்முலா ஒன் கார்கள் மற்றும் சோலார் பேனல்களில் பயன்படுத்தப்படுகிறது.

யிட்ரியம்: வெள்ளை எல்இடி விளக்குகள், கேமரா லென்ஸ்கள் மற்றும் சில வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

டான்டலம்: அறுவை சிகிச்சை உள்வைப்புகள், நியான் விளக்குகளுக்கான மின் முனைகள், டர்பைன் ப்ளேடுகள், ராக்கெட் முனைகள் மற்றும் சூப்பர்சோனிக் விமானங்களுக்கான முனைத் தொப்பிகள், செவிப்புலன் கருவிகள் மற்று பேஸ்மேக்கர்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் மின்னணு கழிவுகளின் அளவு சுமார் இரண்டு மில்லியன் டன்கள் அதிகரித்து வருகிறது. அதில், 20 சதவீதத்திற்கும் குறைவாகவே சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது.

“மேலும் நிலையான உற்பத்தியில் முதலீடு செய்ய மறுசுழற்சி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வணிகங்களை அரசுகள் மாற்றியமைக்க வேண்டிய தேவை உள்ளது,” என்று பேராசிரியர் வெல்டன் கூறினார்.

ஆர்.எஸ்.சி-ன் புதிய ஆராய்ச்சி மேலும் நிலையான தொழில்நுட்பத்திற்கான தேவை நுகர்வோரிடம் வளர்ந்து வருவதை வெளிப்படுத்தியது.

10 நாடுகளில் 10,000 பேரிடம் நடத்திய இணைய கணக்கெடுப்பில், 60% பேர், மின்னணு சாதனம் நிலைத்தன்மை வாய்ந்த முறையில் தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்தால், தங்களுக்கு விருப்பமான தொழில்நுட்ப நிறுவனத்தின் போட்டியாளர் பக்கம் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

தங்கள் சொந்த மின்னணு கழிவுகளை எவ்வாறு கையாள்வது என மக்களுக்குத் தெரியவில்லை என்றும் கணக்கெடுப்பு கூறுகிறது. பதில் அளித்தவர்களில் பலர், தங்க வீடுகளில் பயன்படுத்தப்படாத சாதனங்களின் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துக் கவலைப்படுவதாகக் கூறினார்கள். ஆனால், அவர்கள் அவற்றை என்ன செய்வது எனத் தெரியவில்லை அல்லது மறுசுழற்சி திட்டங்களின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள்.

ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரியைச் சேர்ந்த எலிசபெத் ரேட்க்ளிஃப், பிபிசி ரேடியோ 4-ன் இன்சைட் சயின்ஸில் பேசியபோது, “நமக்கே தெரியாமல் நமது வீடுகளில் பழைய கைபேசிகள் மற்றும் செயலிழந்த கணினிகளில் விலைமதிப்பற்ற உலோகங்களைச் சேமித்து வைக்கிறோம்,” என்று கூறினார்.

“மக்கள் தங்கள் மின்னணு சாதனங்களை சில்லறை விற்பனையாளரிடம் திருப்பித் தரலாம் மற்றும் அவை பாதுகாப்பாக மறுசுழற்சி செய்யப்படும் என்று உறுதியளிக்கக்கூடிய “திரும்பப் பெற்றுக்கொள்ளுதல்” போன்ற திட்டங்கள் மூலம், உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும்.

விநியோகச் சங்கிலிகளில் உள்ள அனைத்து ஏற்ற இறக்கங்கள், இந்தப் பொருட்களுக்கான ஒரு வட்டப் பொருளாதாரம் தேவை என்ற உண்மையை வலுப்படுத்துகிறது. இந்த நேரத்தில், நாம் தொடர்ந்து அவற்றை நிலத்தடியில் இருந்து வெட்டியெடுத்துக் கொண்டிருக்கிறோம்,” என்று ரேட்க்ளிஃப் கூறினார்.
பழைய மற்றும் தேவையற்ற சாதனங்களை அலமாறிகளில் அடைத்துவிட்டு மறந்துவிடாமல், அவற்றை மறுசுழற்சி மையங்களுக்கு எடுத்துச் செல்ல மக்களை ஊக்குவிக்க ராயல் சொசைட்டி முயல்கிறது.
கணினிகள், கைபேசிகள் மற்றும் பிற சாதனங்களைப் பாதுகாப்பாக மறுசுழற்சி செய்வதாக உறுதியளிக்கின்ற அருகிலுள்ள மையத்தைக் கண்டறியும் இணைய ஆதாரங்களை பிரிட்டனிலுள்ள நுகர்வோருக்கு இது சுட்டிக் காட்டுகிறது.

“நாங்கள் எப்போதும் சொல்வது, குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்தல் என்பது தான். எனவே ஒரு கைபேசியை அதிக காலத்திற்கு வைத்திருக்கலாம், பழைய கைபேசியை விற்கலாம் அல்லது உறவினரிடம் கொடுக்கலாம்,” என்கிறார்.

மேலும், “இந்தச் செயல்முறைகளை அளவிடுவதற்கும் உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எனவே நாம் அனைவரும் நம்முடைய சாதனங்களை மறுசுழற்சி செய்யலாம்,” என்றும் ரேட்க்ளிஃப் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button