இலங்கையின் மீட்சிக்கு பொதுவான கடன் சலுகைத் திட்டம் – அலி சப்ரி கோரிக்கை!
கடன்சுமைக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கையின் மீட்சிக்குப் பங்களிப்புச்செய்யக்கூடியவகையில் பொதுவானதோர் கடன்சலுகை வழங்கல் திட்டத்துக்கு இணங்குமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அனைத்துத்தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தென்கொரியாவின் இன்ஸியான் நகரில் கடந்த 2 – 5 ஆம் திகதிவரை நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56 ஆவது வருடாந்தக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நேற்றுமுன்தினம் (04) நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்களின் கூட்டத்தில் இலங்கையில் சார்பில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, “மேலும் வெகுவிரைவில் நாட்டின் நிதியியல் செயற்பாடுகள் முன்னேற்றத்தைக் காண்பிக்கும் என்றும், பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என்றும் நம்புகின்றோம்.
மறுபுறம் அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளும்போது எழக்கூடிய நிதிசார் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கு அவசியமான நிதியியல் உதவிகளை எமது இருதரப்பு மற்றும் பல்தரப்பு பங்காளிகள் வழங்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்” என்று குறிப்பிட்டார்.