குறைந்த வட்டியில் கடன் வசதி! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வசதிகளை வழங்க அமைச்சரவை இணங்கியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதன்படி, கடன் வழங்கும் திட்டத்தை விரைவில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடன் வசதியைப் பெறுவதற்கான ஒரே தகுதி வெளிநாட்டில் பணிபுரிவது அல்லது வெளிநாட்டில் பணிபுரிந்து திரும்பி வந்து இந்நாட்டில் தொழில் தொடங்குவது மட்டுமே என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச மற்றும் வர்த்தக வங்கிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதில் சிக்கல் ஏற்படாத வகையில் இந்த கடன் திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 2 மில்லியன் ரூபா வரை 4 சதவீத குறைந்த வட்டியில் கடன் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கடன் முறை தவிர பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதற்கமைவாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பொருளாதாரச் சிக்கல்களின் போது அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை முறையாகப் பேணுவதற்கான முறைமையும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் பிரதேச செயலகங்களில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக அது தொடர்பான தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.