வலுவடையும் மொச்சா புயல் – மக்களுக்கு அவசர அறிவித்தல்..!
மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தோன்றிய தாழமுக்கம் புயலாக மாற்றம் பெறுவதற்கான நிலைமைகள் உருவாக தொடங்கியுள்ளன.
இன்று இரவு அல்லது நாளை காலை இது புயலாக மாற்றம் பெறும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.
வானிலை மாற்றம் தொடர்பில் மேலும் அவர் எதிர்வுகூறியுள்ளதாவது,
“முன்னர் குறிப்பிட்டது போன்று பங்களாதேஷுக்கும் மியன்மாருக்கும் இடையில் இந்த புயல் கரையைக் கடக்கும். ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்த புயலால் இலங்கையின் எந்த ஒரு பகுதிக்கும் நேரடியான பாதிப்பு கிடையாது.
எதிர்வரும் 12.05.2023 வரை வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு அவ்வப்போது மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
அதேவேளை வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ள இந்த புயல் எமது பிரதேசத்தில் காணப்பட்ட ஈரப்பதனை தன்னுடைய வெளி மற்றும் உள்வளையப் பகுதிகளுக்கு ஈர்த்துக் கொண்டிருப்பதன் காரணமாக நாளை(10.05.2023) நண்பகல் முதல் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் வெப்பநிலை அதிகரிக்கும்.
சில பிரதேசங்களில் மிதமான மழை கிடைத்தாலும், வெப்பநிலையும் உயர்வாக இருக்கும். இந்நிலைமை எதிர்வரும் 24.05.2023 வரை காணப்படும்.
இந்துக்களின் பஞ்சாங்க நிலைமையின் படி நாங்கள் தற்போது அக்கினி நட்சத்திர காலத்தினுள் உள்ளோம். இந்த அக்கினி நட்சத்திரம் என்பது 25 நாட்களைக் கொண்டது. இம்முறை இது 04.05.2023 முதல் 29.05.2023 வரையான 25 நாட்களை உள்ளடக்கியுள்ளது.
சோதிட ரீதியாக இக்காலம் அதிக வெப்பமான காலமாக அறியப்படுகின்றது.
வானிலையடிப்படையிலும் இக்காலப்பகுதியில் மத்திய கோட்டுக்கு அண்மித்த பகுதிகளில் சூரியனின் கதிர்வீச்சு செங்குத்தாக கிடைப்பதனால் இலங்கை மற்றும் ஏனைய தென்னாசிய நாடுகளில் உயர் வெப்பநிலை நிலவும் காலமாகும். ஆகவே எமக்கு நாளை முதல் அதிக வெப்பநிலை கிடைக்கும்.
இந்த உயர் வெப்பநிலையுடன் கூடிய வானிலை எதிர்வரும் 24.05.2023 வரை நிலவும்.
கடந்த ஆண்டும்(2022) அக்கினி நட்சத்திர காலத்தில் அசானி என்ற புயல் உருவானது. இவ்வாண்டும் மொச்சா’ என்ற புயல் உருவாகவுள்ளது.
புயலின் தோற்றத்திற்கு கடற்பிரதேசத்தில் நிலவும் அதிகூடிய வெப்பநிலையே அடிப்படையான காரணியாகும்” – எனத் தெரிவித்துள்ளார்.