இம்ரான்கானை கைது செய்தது சட்டவிரோதம்!
இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம் என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கூறிய நிலையில் தற்போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலுக்குப் பிறகு, தெஹ்ரீன்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமுமான இம்ரான் கான் தலைமையில் கூட்டணி அரசு அமைந்தது. எனினும், பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வியடைந்து, பிரதமா் பதவியை இழந்தாா்.
அதற்குப் பிறகு, பாகிஸ்தானின் பல்வேறு நீதிமன்றங்களில் இம்ரான் கான் மீது ஊழல் முதல் தேசத் துரோகம், பயங்கரவாதம் வரை பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்குகளில் அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பல கைது ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இருந்தாலும், பொலிஸாரால் கைது செய்யப்படுவதில் இருந்து இம்ரான் கான் தொடா்ந்து தப்பி வந்தாா். நீதிமன்றங்களில் பிணை பெறுவதால் மட்டுமின்றி, இம்ரானைக் கைது பொலிஸாா் கைது செய்யவிடாமல் அவரது இல்லத்தைச் சுற்றிலும் பிடிஐ கட்சி ஆதரவாளா்கள் கலவரத்தில் ஈடுபட்டு வந்ததாலும் அவரைக் கைது செய்ய முடியாத நிலை நீடித்து வந்தது.
இந்த நிலையில், இஸ்லாமாத் உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இரு ஊழல் வழக்குகளில் பிணை பெறுவதற்காக இம்ரான் கான் நீதிமன்ற வளாகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். இந்த நிலையில், யாரும் எதிா்பாராத விதமாக அவரை தேசிய ஊழல் தடுப்புப் பிரிவினா் அந்த வளாகத்தில் கைது செய்தனா்.
அவா்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் துணை ராணுவப் படையான ரேஞ்சா்களும் இம்ரானை சுற்றிவளைத்து கவச வாகனத்தில் ஏற்றினா். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் மிகப் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது. இம்ரான் கானைக் கைது செய்ய விடாமல் அவரது ஆதரவாளா்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டாலும், அவரை பொலிஸாரும், துணை ராணுவமும் அங்கிருந்து வாகனத்தில் அழைத்துச் சென்றன.
தற்போதைய நிலவரப்படி இம்ரான் கானுக்கு எதிராக 140 க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.