அரசின் செயற்பாடுகளுக்கு 15 அமைச்சுக்கள் போதுமானது – வெளியான ஆய்வு!
அரசாங்கத்தின் நிர்வாகத்தை 30 அமைச்சுக்களுடன் கொண்டு நடத்துவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளார்.
இருப்பினும், நிர்வாகத்தை 15 அமைச்சுக்களுடன் நடத்த முடியும் என வெரிடே ரிசர்ச் எனும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்ற மே 17 அன்று ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட தகவலில், தற்போது சுமார் 30 அமைச்சுக்கள் உள்ளதுடன், அதனை விரிவுப்படுத்தாமல் வைத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்தநிலையில், இலங்கையில் அமைச்சரவை அமைப்பதற்கான ஒரு பகுத்தறிவு முறை என்ற தலைப்பில் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் படி, செயல்பட போதுமான 15 அமைச்சுகளை வெரிடே ஆய்வு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேசமயம், துண்டு துண்டாக – தொடர்புடைய துறைகள், வெவ்வேறு அமைச்சுக்களாக பிரிக்கப்பட்டு, தவறான சீரமைப்பு காரணமாகவே கடந்த காலங்களில் செலவுகள் அதிகரித்துள்ளதுடன், முடிவெடுப்பதிலும் செயல்படுத்துவதிலும் தாமதங்களை உருவாக்கியிருந்தன.
இதேவேளை, அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் திறனைக் குறைத்துள்ளது எனவும் வெரிடே ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், 15 அமைச்சுக்களும் உகந்த முறையில் வடிவமைக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட வேண்டும் என்று வெரிடே ஆய்வு தெரிவித்துள்ளது.
நிதி மற்றும் திட்டமிடல், நீதி, பாதுகாப்பு, கல்வி மற்றும் ஆராய்ச்சி, ஆரோக்கியம், விவசாயம், உழைப்பு, பொது பயன்பாடுகள், துறைமுகங்கள்,கப்பல் போக்குவரத்து, மற்றும் சிவில் விமான போக்குவரத்து, பொருளாதார விவகாரங்கள், உள்துறை மற்றும் பொது நிர்வாகம், வெளியுறவு, குடும்பம் மற்றும் சமூக வளர்ச்சி, சமூகம் மற்றும் கலாசாரம், சுற்றுச்சூழல் போன்ற அமைச்சுக்கள் குறித்து ஆய்வு பரிந்துரைத்துள்ளது.