அதிகரிக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு – அமைச்சு வெளியிட்ட தகவல்!
QR முறைப்படி எதிர் வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அளவுகள் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அறிவித்தலை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய முச்சக்கர வண்டி உற்பட அனைத்துவிதமான வாகனங்களுக்கும் எரிபொருள் ஒதுக்கீடு அளவுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் முதல் எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை திருத்தத்துடன் சேர்த்து எரிபொருள் ஒதுக்கீட்டு திருத்தத்தையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெலிகம பிரதேசத்தில் இன்று(28) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் புத்தாண்டு காலத்தில் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்தோம். இவ்வளவு அதிகரிப்பின் பின்னரும் எமது வெளிநாட்டு கையிருப்பில் பெரிய அழுத்தங்கள் ஏற்படவில்லை.
இதனை மேலும் அதிகரிக்க முடியுமா எனப் பார்க்குமாறும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தார்.
அதனால்தான் அடுத்த எரிபொருள் விலை திருத்தத்திற்குப் பிறகு மீண்டும் ஜூன் மாதத்தில் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்கச் செய்கிறோம்.
தற்போது ஒரு மோட்டார் சைக்கிளுக்கு 7 லிட்டர் கொடுக்கப்படுகிறது. அதை 14 ஆக மாற்றுவோம் என்று நம்புகிறோம். முச்சக்கரவண்டிக்கான 7 லீற்றரை 14 ஆக மாற்றுவோம்.
பின்னர் மற்றவர்களுக்கு அதே வழியில் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும். இவ்வாறு அடுத்தமாதம் அளவில் எரிபொருள் ஒதுக்கீட்டு திருத்தம் மற்றும் எரிபொருள் விலைகளை மாற்றியமைப்போம்” என தெரிவித்தார்.