உலகளவில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்..!
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இலங்கைக்கு துணைத்தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளும் ஏகமனதாக இந்த தெரிவினை மேற்கொண்டுள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி மொஹான் பீரிஸ் இந்தப் பதவியை பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளார்.
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2024ம் ஆண்டு செப்டம்பர் வரையில் ஆசிய பசுபிக் பிராந்திய வலயத்தின் சார்பில் இந்த பதவியை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிவியா, கொங்கோ, எஸ்டோனியா, காம்பியா, ஐஸ்லாந்து, ஈரான், மலேசியா, நெதர்லாந்து, செனகல், சிங்கப்பூர், மொரொக்கோ, சூரினேம், உகண்டா, உஸ்பெகிஸ்தான் மற்றும் ஸாம்பியா ஆகிய நாடுகளுக்கும் இந்த துணைத் தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகளுக்கு மேலதிகமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் நிரந்தர உறுப்புரிமை நாடுகளும் பொதுச் சபையின் துணைத் தலைமைப் பொறுப்பினை வகிக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.