News

தனிப்பட்ட தகவல்களை சமுக ஊடகங்களில் பகிர வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை..!

தனிப்பட்ட தகவல்களை மற்றுமொரு தரப்பினருக்கு வழங்க வேண்டாம் என காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் மூலம் பண மோசடி சம்பவங்கள் தொடர்பில் அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட தகவல்களை வழங்குதல் மற்றும் சமுக ஊடகங்களில் பரிமாறுதல் போன்ற விடயங்களில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இதன்போது தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (5) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நபர் ஒருவர் தனது தனிப்பட்ட தகவல்களை மற்றுமொரு தரப்பினருக்கு வழங்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

எந்தவொரு சூழ்நிலையிலும் தனது தனிப்பட்ட தகவல்களை வழங்கும் போது, குறிப்பாக தேசிய அடையாள அட்டை இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம், சாரதி அனுமதிப்பத்திரம் என்பவற்றின் நகல், வீட்டு முகவரி, குடும்பம் தொடர்பான தகவல்கள், வங்கி கணக்கிலக்கம் தொடர்பான தகவல்கள், வரவு மற்றும் செலவு அட்டை விவரங்கள், வங்கிக் அட்டைகளுக்கு வழங்கப்படும் இரகசிய இலக்கம் (OTP) என்பவற்றை எக்காரணம் கொண்டும் அடையாளந்தெரியாத தரப்பினரிடம் கொடுக்க வேண்டாம்.

மோசடிக்காரர்களின் கவர்ச்சிகரமான சலுகைகள், அவர்களால் முன்வைக்கப்படும் போலி பிரசாரங்கள் என்பவற்றை நம்பி ஏமாற வேண்டாம்.

இத்தகைய மோசடி செய்பவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் உங்களை அணுகலாம். மோசடிக்காரர்களின் போலியான வாக்குறுதிகளை நம்பி தகவல்களை வழங்குவதன் மூலம் நிச்சயம் ஏமாற்றப்படுவீர்கள்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு உங்கள் சொத்துக்களை இழக்க வேண்டாம்.” என கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button