டொக்டர் மீரா மொஹைதீனை சுட்டுக் கொன்ற குற்றவாளிக்கு 14 வருடங்களின் பின்னர் மரணதண்டனை
வவுனியாவில் வைத்திய நிபுணர், கலாநிதி மொஹமட் சுல்தான் மீரா மொஹைதீனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று(08) மரணதண்டனை விதித்துள்ளது.
வவுனியா பொது வைத்தியசாலை மகப்பேறியல் நிபுணர், வைத்திய கலாநிதி மொஹமட் சுல்தான் மீரா மொஹைதீன் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி வவுனியா தனியார் வைத்தியசாலையொன்றின் வௌிவாசலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொலைச் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து 4 வெற்று துப்பாக்கி ரவைகள் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டன.
வவுனியா – மரக்காளம் பளையில் வைத்து இராணுவ சிப்பாய் ஒருவரினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவருடைய உடைமையில் இருந்து கைத்துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டது.
கொலைச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 4 துப்பாக்கி ரவைகளும் கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கிக்கு உரியது என இரசாயன பகுப்பாய்வாளர் இன்று(08) வவுனியா மேல் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இந்த மரணமானது துப்பாக்கிச் சூட்டினால் இடம்பெற்றுள்ளமை பிரேத பரிசோதனை ஊடாக உறுதி செய்யப்பட்டதையடுத்து, பிரதிவாதியை கொலை வழக்கின் குற்றவாளியென நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
இதுவரை பிணையில் இருந்த குறித்த சந்தேகநபர் இன்று(08) நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நிலையில், அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு கண்டி போகம்பரை சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.