டொலருக்காக இலங்கையில் கஞ்சா!
நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ள சந்தர்ப்பத்தில் கஞ்சா போன்ற தேவையில்லாத, தெரியாத ஒரு பொருளுக்கு முதலை போட்டு நட்டமடைவது என்பது வீணான விடயம் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய சிரேஷ்ட நிகழ்ச்சி திட்ட அதிகாரி ஏ.சி.ரஹீம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், உண்மையிலே பார்த்தால் உலகத்திலே கஞ்சா உற்பத்தியை ஒரு வணிகமாக செய்த நாடுகள் பரீட்சித்து வருகின்றன. அனைத்து நாடுகளிலுமே அறிக்கைகளை எடுத்துப் பார்க்கும் போது கஞ்சாவினால் வரக்கூடிய வருமானம் மிகக்குறைந்து காணப்படுகிறது.
ஏற்கனவே எமது நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் தேவையில்லாத தெரியாத ஒரு பொருளுக்கு முதலை போட்டு நட்டமடைவது என்பது வீணான விடயம்.
தேயிலை, இறப்பர், தென்னை போன்ற பல வளங்களை கொண்ட எமது நாட்டில் அந்த விடயங்களை கூட ஒழுங்காக விளம்பரம் செய்து கொண்டு வரியை எடுக்காத சந்தர்ப்பத்தில் எங்கோ இருக்கின்ற பாதிப்பான விடயத்தை கொண்டு வந்து டொலரை எடுக்க வேண்டும் என்பது சிந்திக்க வேண்டிய விடயம்.
அத்துடன் சிகரெட்டுக்கு முறையான விதித்தில் வரி விதிக்காமையால் கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் இந்த அரசாங்கத்திற்கு கிட்டத்தட்ட 70 பில்லியன் வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.