News

கொரோனா மற்றும் டெங்கு நோயை கட்டுப்படுத்த விசேட அமைச்சர்கள் குழு நியமனம்

நாட்டிற்குள் கொரோனா பரவல் மற்றும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழுவொன்றை அதிபர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.

2023 ஜூன் மாதம் 22 திகதியிட்ட எண். 23/இதர/026 இன் படி, அமைச்சரவை தீர்மானத்திற்கு ஏற்ப இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான அமைச்சர்கள் குழுவில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட 08 பேர் அங்கம் வகிக்கின்றனர்.

இதேவேளை, அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற 11 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தலைமையிலான நிபுணர் குழுவில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சிறி சந்திரகுப்த, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.கொடிப்பிலியாராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.எம். அர்னோல்ட், தொற்று நோய்கள் பிரிவுப் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன, விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம, சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ, நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு வைத்தியத் துறையின் பேராசிரியர் நீலிகா மாளவிகே, கலாநிதி உபுல் திஸாநாயக்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

குறித்த குழுவின் இணைப்பாளராக அதிபரின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் புத்திகா எஸ்.கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த நிபுணர் குழுவிற்கு உதவுவதற்காக மாகாண மட்டத்தில் 09 உபகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மாகாண பிரதம செயலாளர் தலைமையிலான குழுவில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர், பிராந்திய சுகாதார பணிப்பாளர், உள்ளூராட்சி ஆணையாளர்கள், முப்படைகளின் உறுப்பினர்கள், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள், மாகாண பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா மற்றும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அமைச்சர்கள் குழு நேற்று முற்பகல் நாடாளுமன்றத்தில் குழுத் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூடியது.

இந்நிகழ்விற்கு டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளும் அழைக்கப்பட்டதுடன், நாட்டில் சுகாதாரப் பொறிமுறையானது முறையாகச் செயற்படுகின்ற போதிலும், மாகாண மட்டத்தில் மக்களைத் தெளிவூட்டும் துரித வேலைத்திட்டம் ஒன்றின் அவசியம் குறித்தும் அங்கு வலியுறுத்தப்பட்டது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (13) காலை நிபுணர் குழுவை சந்திப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதுடன், அதற்காக மாகாண பிரதம செயலாளர்களை அழைத்து மாகாண மட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு செயற்திட்டத்தை தயாரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button