News

விதிமுறைகளை மீறிய இந்திய அணி: பெருந்தொகை அபராதம் விதித்த ஐசிசி..!

விதிமுறைகளை மீறிய இந்திய அணி: பெருந்தொகை அபராதம் விதித்த ஐசிசி..! | Penalty For Subman Gill Test Championship Finalஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பந்துவீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதற்காக இந்திய அணிக்கு நூறு சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அவுஸ்திரேலிய அணி 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இப்போட்டியில் பந்து வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதற்காக ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் 100 சதவீத அபராதம் விதித்து, ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்மூலம் இறுதிப் போட்டியில் விளையாடியதற்கான ஒட்டுமொத்த கட்டணத்தையும் இந்திய அணி வீரர்கள் இழந்துள்ளனர்.

இதேபோன்று, ஒட்டுமொத்த அவுஸ்திரேலிய அணிக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து 80 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி விதி 2.22 இன் படி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளப்படும் ஒவ்வொரு ஓவருக்கும் தலா 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

அதன்படி 5 ஓவர்கள் தாமதமாக வீசிய இந்திய அணிக்கு 100 சதவீதமும், 4 ஓவர்கள் தாமதமாக வீசிய அவுஸ்திரேலிய அணிக்கு 80 சதவீதமும் ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

மேலும், இந்திய இளம் தொடக்க வீரர் ஷூப்மன் கில்லுக்கு 115 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷூப்மன் கில் அவுஸ்திரேலிய அணி வீரர் கேமரூன் கிரீனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

குறித்த ஆட்டமிழப்பு தொடர்பில் பல்வேறான சர்ச்சை கருத்துக்கள் எழுந்தன. இந்நிலையில் குறித்த ஆட்டமிழப்பு தொடர்பான புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஷுப்மன் கில், சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இதனால் நடுவரின் தீர்ப்பை விமர்சனம் செய்வது ஐசிசி விதிக்கு மாறானது என்பதால், ஷுப்மன் கில்லுக்கு போட்டித் தொகையில் இருந்து கூடுதலாக 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், ஷுப்மன் கில் தனது போட்டித் தொகையை இழந்ததுடன், கூடுதலாக 15 சதவீதம் கைப்பணத்தை இழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button