தனியார் கல்வி நிலைய ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
தனியார் கல்வி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் உரிமம் வழங்கவும், அவர்களுக்கு தொழில்முறை அங்கீகாரம் வழங்கவும் நாடாளுமன்றக் குழு முன்மொழிந்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கல்விக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் தனியார் கல்வி வகுப்புகளின் தரம் மற்றும் இந்த
ஆசிரியர்களின் தகுதிகள் மற்றும் தரம் குறித்து சமூகத்தில் இடம்பெற்று வரும் விவாதம் தொடர்பாக குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தனியார் ஆசிரியர்களை ஒழுங்குபடுத்தவும், அவர்களின் தொழிலுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு குழு பரிந்துரை செய்துள்ளது.
மற்ற நாடுகளில் தனியார் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் உரிமம் வழங்கப்பட்டு, அந்த தொழிலுக்கு தொழில்முறை அங்கீகாரம் வழங்கப்படுவது தெரியவந்தது. எனவே இலங்கையிலும் அவ்வாறானதொரு முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என குழு பரிந்துரைத்துள்ளது.
இவ்வாறானதொரு முறையைத் தயாரிப்பதில் உடனடி கவனம் செலுத்துமாறும், தனியார் கல்வி ஆசிரியர்களை ஒழுங்குபடுத்துவதற்கும் சட்டரீதியாக அவர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம் வழங்குவதற்கும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
இதேவேளை சர்வதேச பாடசாலைகளை மேற்பார்வை செய்வதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் கல்வி அமைச்சிற்குள் விசேட பிரிவொன்றை நிறுவுவதற்கும் முன்மொழியப்பட்டது. கல்வி அமைச்சின் கீழ் வராத சர்வதேச பள்ளிகள் மற்றும் பிற பள்ளிகளை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான அளவுகோல்களை தேசிய கல்வி ஆணையம் தயாரித்து வருவதாக தெரியவந்துள்ளது.