News

அரச காணியொன்றை விற்பனை செய்ய ஆயத்தம்!

அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் அதனுடன் இணைந்த தேசிய இயந்திர அதிகார சபையின் ஊழியர்களின் சம்பளம், நிலுவைத் தொகை மற்றும் நலன்புரி கொடுப்பனவுகளுக்கான நிலுவைகளை வழங்குவதற்காக பேலியகொடையில் உள்ள கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பெறுமதியான காணி ஒன்று விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் பெறுமதி சுமார் 10 பில்லியன் ரூபா எனவும் இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரத்னசிறி களுபஹன தெரிவித்துள்ளார்.

பேலியகொட மீன் சந்தையை அண்மித்துள்ள 17 ஏக்கருக்கும் அதிக பரப்பை கொண்ட உயா் நகர்ப்புற பெறுமதி கொண்ட காணியொன்றை விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய இயந்திர அதிகார சபையின் ஊழியர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளத்தில் இருந்து சுமார் 7,000 ரூபாவை மாத்திரம் வழங்குவதற்கு ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தமை தொடர்பில் வினவிய போதே அவா் இதனைதெரிவித்தார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுமானத் துறையில் பணிகள் முடங்கியுள்ள நிலையில் வருமானங்கள் இழக்கப்பட்டுள்ளதால் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய இயந்திர அதிகார சபை ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், பெறக்கூடிய பணத்தில் இவ்வாறு சம்பளத்தில் ஒரு பகுதியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

மேலும், தமது விருப்பதிற்கு ஏற்ப ஓய்வு பெற 1,100 ஊழியா்கள் காணப்படுவதுடன் அவா்களது கொடுப்பனவுக்காக சுமாா் 2600 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் தொிவித்த அவா், நல்லாட்சியின் போது தேசிய இயந்திர அதிகார சபையில் இடம்பெற்ற பாரிய நிதி முறைகேடுகள் மற்றும் வரம்பை மீறி ஊழியர்களை பணிக்கு அமா்த்தியதன் காரணமாக இந்த சிக்கல் நிலைமை தோன்றியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளாா்.

இந்த பிரச்சினையை கலந்துரையாடி தீர்வு காண்பதற்காக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவிற்கும் இடையில் இன்று (19) கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சட்டத்தரணி ரத்னசிறி களுபஹன மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button