அமைச்சரவையில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றம் – தீவிர நடவடிக்கையில் ரணில்
இலங்கையில் விரைவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கருக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையில் இந்த அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் அமைச்சுப் பதவி கோரிக்கைகள் காரணமாக இந்த அமைச்சரவை மாற்றம் காலம் தாழ்த்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமனவின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்சவைக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது சில ஸ்ரீலங்கா புதிய முன்னணியின் முக்கியஸ்தர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியான நிலையில் வினைத்திறனாக செயல்பட கூடியவர்களுக்கு மட்டுமே அமைச்சு பதவிகளை வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சந்திப்பின்போது திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அமைச்சரவை மாற்றத்தில் சில முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சுகாதார அமைச்சு, ஊடகத்துறை அமைச்சு போன்றவற்றில் மாற்றம் செய்யப்படலாம்.
அண்மை காலமாக சுகாதாரத் துறையில் பல்வேறு குழப்ப நிலைமைகள் காணப்படுவதுடன் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ஆலோசனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.