முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – கொழும்பில் நடைமுறையாகும் புதிய திட்டம்!
கொழும்பில் உள்ள புராதன பெறுமதி வாய்ந்த காணி மற்றும் கட்டிடங்களை தேசிய பாரம்பரிய வலயமாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு 07, இன்டிபென்டன்ஸ் அவென்யூவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொழும்பு 80 கிளப் பொதுமக்களுக்கு அண்மையில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இவ்வாறான பெறுமதிமிக்க 35 முதல் 40 வரையான காணிகள் மற்றும் கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் செலவில் தெரிவு செய்யப்பட்ட காணி மற்றும் கட்டிடங்களை அபிவிருத்தி செய்து பழுதுபார்த்து முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால குத்தகைக்கு கொடுத்து செலவீனங்களை ஈடுசெய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த நிலங்கள் மற்றும் கட்டிடங்களின் தொன்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அவற்றை மேம்படுத்துவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.