இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முக்கிய தீர்மானம்
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான வளாகத்திற்குள் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் உரிய நிறுவனங்களுக்கிடையில் எவ்வித உத்தியோகபூர்வ ஆவணங்களும் பரிமாறப்படவில்லை எனவும் ஜனாதிபதியின் நெருங்கிய சகாக்கள் சிலர் தன்னிச்சையாக திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோரிங்டன் சதுக்கத்தில் அமைந்துள்ள ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் கட்டிடங்கள் தற்போது பல்வேறு வர்த்தக நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜனாதிபதி ஊடகப் பிரிவை குறித்த கட்டிட வளாகத்திற்குள் கொண்டு வருவதற்கான உடனடி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், வானொலி தொடர்பாடல் பயிற்சி நிலையம், சிறுவர் நிகழ்ச்சி பயிற்சி நிலையம் மற்றும் ஏனைய அத்தியாவசிய நடவடிக்கைகள் என்பன குறித்த கட்டிட தொகுதியில் இருந்து அகற்றப்பட்டு ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.