வீடு வாங்க காத்திருந்த மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்
கொழும்பின் புறநகர் பகுதியான மாலபே பகுதியில் குறைந்த விலையில் வீடுகள் கட்டித்தருவதாகவும், காணி வாங்கி தருவதாகவும் சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடிக்கு தொடர்புடைய தனியார் நிறுவனத்தை நடத்தும் இடத்தை வாடிக்கையாளர்கள் குழு ஒன்றினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மிகவும் சலுகை விலையில் புதிய வீடு கட்டித் தருவதாகவும், புதிய காணி வாங்க வாய்ப்பு தருவதாகவும் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டது.
இவ்வாறு விற்கப்படும் காணி மற்றும் வீடுகள் ஒரு கோடி முதல் இரண்டு கோடி ரூபாய் வரையில் விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிறுவனத்திற்கு புதிய வீடு கட்டுவதற்கும் புதிய காணி வாங்குவதற்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் முன்பணமாக 10, 20, 35, 48, 50 இலட்சம் போன்ற வடிவங்களில் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதிக்கு முன்னர் மீதித் தொகையை செலுத்தி உரிய பரிவர்த்தனையை நிறைவு செய்யுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருந்ததுடன், அதற்கமைய, எஞ்சிய பணம் அனைத்தும் கடந்த ஜூன் 22ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால் பத்து நாட்கள் கடந்தும் எதிர்பார்த்த காணியோ, வீடோ கிடைக்காததால் மாலம்பே பகுதியில் நிறுவனம் இயங்கி வந்த கட்டிடத்தின் முன் 50 வாடிக்கையாளர்கள் வந்துள்ளனர்.
அவர்கள் வந்த நேரத்தில், அலுவலகத்தில் அனைத்து பொருட்களையும் அகற்றியிருப்பதை அவதானித்தனர்.
இதுதவிர, இந்த கட்டடம் வாடகை அடிப்படையில் கொடுக்கப்பட்டது என்ற அறிவிப்பும், வாசலில் வைக்கப்பட்டது. இதனால், வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த நிறுவனம் பல போலி பெயர்களில் இயங்கி வருவதும், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பல பெயர்களில் செயற்பட்டமை தெரியவந்துள்ளது.