வட மாகாண சுகாதார சேவைகளில் நிலவும் நெருக்கடிகள் – 2000 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை
வடக்கு மாகாணத்தில் சுமார் 2000 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வைத்தியசாலைகளில் மொத்தமாக 8000 பேர் அனுமதிக்கப்பட்ட ஆளணியாக இருந்தாலும் சுமார் 2000 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் 2000இற்கு மேற்பட்ட ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது. அதில் குறிப்பாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சுகாதார உதவியாளர்களாக காணப்படுகின்றார்கள். அதேபோல தாதியர்கள், மருத்துவ மாதுக்கள் என பல்வேறுபட்ட நிலைகளிலும் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது.
தற்போதுள்ள நிலையில் புதிதாக உள்வாங்குவதில் தாமதம் காணப்படுகின்றபடியினால் எதிர்வரும் காலங்களில் சுகாதார அமைச்சின் ஊடாக இந்த நியமனங்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் சில மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடும் காணப்படுகின்றது. இதனால் நோயாளிகள் அசௌரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இருப்பினும் சுகாதார அமைச்சின் மருந்துப் பிரிவுக்கு பொறுப்பானவர்கள் தொடர்ச்சியாக மருந்துகளை அனுப்பி கொண்டிருக்கின்றார்கள்.
சில மருந்துகளுக்கு திடீரென தட்டுப்பாடு ஏற்படுகின்றபடியால் பொதுமக்கள் அந்த மருந்தை மருந்தகங்களில் வாங்க வேண்டிய நிலை காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார்.