கொழும்பில் புதிய மின் திட்டம் அறிமுகம்!
கொழும்பு நுகேகொடை நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலத்தடி மின்சாரத் திட்டமனது கடந்த வெள்ளிக்கிழமை (07) அன்று பிரதான மின்கம்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இந்த புதிய திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியை வழங்கியுள்ளது.
இது ஒரு முன்னோடித் திட்டமாக இருக்கின்ற போதிலும், இத்திட்டத்தில் நவீன உபகரணங்களும், தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு நமது நாட்டின் தேவைக்கேற்பவும் நவீன உலகத்தின் தேவைக்கேற்பவும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது
1930 களில் இலங்கையில் பிரித்தானிய ஆட்சி நிலவிய போது, கொழும்பு ,காலி மற்றும் கோட்டை ஆகிய இடங்களில் நிலத்தடி மின்சார திட்டங்கள் செயற்படுத்தப்பட்டிருந்தது, அதற்கு பின்னர் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது நிலத்தடி மின்சார திட்டமாக இத்திட்டம் குறிப்பிடப்படுகிறது.
இத்திட்டமானது இலங்கையின் மின்சார தனியார் நிறுவனமான LECO நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுவது மாத்திரமல்லாமல் இத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியினை வழங்குகின்றது.
குறித்த திட்டமானது நுகேகொடையை தொடர்ந்து கோட்டை மற்றும் களனி ஆகிய பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் மூலமாக நகர் நிர்மாண மற்றும் மரநடுகை நடவடிக்கைகளுக்கான பெரும்பாலான தடைகள் நீங்குவதுடன் மின்கம்பங்களினால் ஏற்படக்கூடிய தடைகள், வாகன விபத்துக்கள் என்பனவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலத்தடி மின் அமைப்பால், மின்வெட்டு பிரச்சினை பாரிய அளவில் குறைவது மாத்திரமல்லாமல் பராமரிப்பு பணிகளும் குறைவதால் அரசுக்கு அதிக இலாபத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நம்பப்படுகிறது.