அரச ஊழியர் தெரிவில் மும்மொழி புலமை அவசியம் – அனுராதா விஜேகோன்
இலங்கையில் உள்ள அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை தெரிவு செய்யும் போது மும்மொழி திறமையை சிறிலங்கா அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டுமென பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், அமைச்சின் மேலதிக செயலாளர் அனுராத விஜேகோன் தெரிவித்துள்ளார்.
பன்மொழி இலங்கை சமூகத்தில் உத்தியோகபூர்வ மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அனுராத விஜேகோன் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் உள்ள அரச நிறுவனங்களில் மும்மொழி திறமையற்ற அதிகாரிகள் செயல்படுவது மக்கள் மத்தியில் சில அசௌகரியங்களை எதிர்நோக்க வழிவகுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் அனுராத விஜேகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
“மக்கள் அனைவரும் மும்மொழி திறமையை கொண்டிராத காரணத்தால் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக தவறான வழிகளை தேர்ந்தெடுப்பதனால் அரச துறைகளில் ஊழல்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், ஊழலற்ற நாட்டை உருவாக்கும் செயல்முறையின் முதல் கட்டமாக அரச நிறுவனங்களுக்கு மும்மொழி தேர்ச்சியுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்” எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.