அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை: ஆசிய நாடுகளில் விலை அதிகரிக்க வாய்ப்பு
உள்நாட்டு பணவீக்கம் மற்றும் உள்ளூர் அரிசி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியை இந்தியா தடை செய்துள்ளது.
உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா அதிரடியாக விலகி பல நாடுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்தியா அரிசி ஏற்றுமதிக்கு திடீரென்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பாசுமதி அல்லாத எந்த வகையான அரிசியையும் ஏற்றுமதி செய்யக்கூடாது என்றும் ஏற்றுமதி செய்வதற்காக ஏற்கனவே கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள அரிசிக்கு இந்தத் தடை பொருந்தாது என்றும் மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.
மேலும் தெரிய வருகையில், உள்நாட்டு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியை இந்தியா தடை செய்துள்ளது. எனினும் உயர் ரக பாசுமதி அரிசிக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
இத் தடை உத்தரவானது, உலகளாவிய உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா உலகளாவிய ஏற்றுமதியில் 40% க்கும் அதிகமாக முன்னெடுக்கிறது.
திடீரென்று பெய்த கன மழை, வெளிநாட்டு தேவையை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வதேச ஏற்றுமதி மீதான 20% வரி உரிய பலனை அளிக்காதது மட்டுமின்றி தீவிர காலநிலை மாற்றத்தால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் இந்திய அரசு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாகவே கூறப்படுகிறது.
மேலும் உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா அதிரடியாக விலகி பல நாடுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்தியா அரிசி ஏற்றுமதிக்கு திடீரென்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் இந்திய அரிசியின் விற்பனை 35 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளதுடன், உள்ளூரில் விலை உயர்வானது 3 சதவீதம் வரையில் அதிகரித்தது.
அது மட்டுமின்றி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்திய மக்கள் அரிசிக்காக 11.5 சதவீதம் அதிகமாக செலவிடும் சூழல் உருவானது.
இதனையடுத்தே உள்ளூர் அரிசி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களில் தேர்தல்கள், தேசிய அளவில் தேர்தலும் நெருங்கி வரும் நிலையில் விலைவாசி உயர்வு என்பது நரேந்திர மோடி அரசாங்கத்திற்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் இந்த ஏற்றுமதி தடையானது பல ஆசிய நாடுகளின் அரிசி விலை உயர்வுக்கும் காரணமாக அமைந்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் உலகம் முழுவதும் பண்டங்கள் மற்றும் தானியங்களின் விலை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.