தோல்வியில் முடிந்த ரணிலின் முயற்சி!
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான சர்வகட்சி கூட்டம் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அதிபர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இன்றைய சர்வகட்சி கூட்டம் எந்தவொரு தீர்மானங்களும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்ததாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஐ.பி.சி. தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார்.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மக்களின் வாக்குகளின் ஊடாக அதிபராக தெரிவு செய்யப்படாமையினால் அதிபர் தேர்தலை நடத்தி ஆட்சிப்பீடம் ஏறிய பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு சிங்கள பேரினவாத கட்சிகள் தெரிவித்துள்ளன.
எனினும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தான் அதிபரிடம் வலியுறுத்தியதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் அதிபரால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு அதிபரின் வழமையான அரசியல் செயற்பாட்டின் ஒரு அங்கம் என ஜக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.
சர்வகட்சி மாநாட்டில் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட நிலையில் ஜக்கிய மக்கள் சக்தி அறிக்கையிடல் மூலம் இவ்விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளது.
வடக்கு கிழக்குப் பிரச்சினை உடனடியாக எழவில்லை எனவும் பல தசாப்தங்களாக பல்வேறு அரசாங்கங்கள் இப்பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.