13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது பாரதூரமானது – அலி சப்ரி
இலங்கையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் போது பாரதூரமான பின்விளைவுகள் ஏற்படலாமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் போது நெருக்கடிகள் ஏற்படலாமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தெற்கு வாழ் மக்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நீதியான தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் செயல்முறையில் தேசிய, இன, மத பேதமின்றி அனைவரும் செயல்பட வேண்டுமென்பதோடு இதற்கான பொது முறையொன்று உருவாக்கப்பட வேண்டும்.
அத்துடன், காவல்துறை அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் பகிரங்க விவாதம் முன்னெடுக்கப்பட வேண்டும். சகலரும் கூட்டாக இணைந்து இந்த விடயத்தில் ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டும்.
ஒன்பது மாகாணங்களுக்கு ஒன்பது காவல்துறை பிரிவுகள் உருவாகி, 9 முதலமைச்சர்களின் கீழ் காவல்துறை நிர்வகிக்கப்படும் போது ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பிலும் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
எந்தவொரு நாடும் அவர்களுக்கு தேவையான சட்டங்களை அந்த நாட்டிலேயே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். இதற்காக ஒவ்வொரு நாட்டிலும் நாடாளுமன்ற கட்டமைப்பு இருப்பதாகவும் அவர் கூட்டிக்காட்டியுள்ளார்.