News

ஐஎம்எப் அங்கீகரித்த கட்டமைப்பு சீர்திருத்தங்களை நிறுத்த தீர்மானித்துள்ள இலங்கை அரசாங்கம்

இலங்கைக்கான பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியம், அங்கீகரித்த சில கட்டமைப்பு சீர்திருத்தங்களை, அரசியல் மற்றும் பொதுமக்களின் ஆதரவின்மை காரணமாக அரசாங்கம் நிறுத்தி வைக்க உள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

வரி வசூலிப்பு நிறுவனங்களின் செயற்பாடுகளை மாற்றியமைக்க வருமான நிர்வாகச் சீர்திருத்தங்கள் உட்பட சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.

இந்த சீர்திருத்தங்கள் நீண்ட காலத்திற்கு மட்டுமே ஆதாயங்களை உருவாக்க முடியும், அதே நேரத்தில் அதன் எதிர் விளைவுகள் குறுகிய காலத்தில் கணிசமானதாக இருக்கலாம். இது பொதுமக்களுக்கு பொருளாதார நன்மைகளை உடனடியாக உருவாக்காது என்ற காரணத்தினால், சமூக அமைதியின்மை மற்றும் பொது கிளர்ச்சியை உருவாக்கும் என்று அதிகாரிகள் அச்சம் கொண்டுள்ளனர்.

எனவே இந்த எதிர்ப்பை எதிர்கொள்ள அரசாங்கத்திற்கு அரசியல் பலம் இல்லை என்ற அடிப்படையில், வரவிருக்கும் தேர்தல் நேரத்தில் இந்த சீர்திருத்தங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது. பலவீனமான பொருளாதார நடவடிக்கைகளின் போது, இத்தகைய சீர்திருத்தங்கள் அரசியல் செலவினங்களை ஏற்படுத்துவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி துறை அரசு நிறுவனங்கள், துறைமுக விமான நிலையம் மற்றும் விமான நிறுவன மறுசீரமைப்பு ஆகியவற்றில் உடனடி சீர்திருத்தங்கள்  தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட அறிக்கையின்படி, தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் வருடாந்த இலக்குகளை அடைவதை அரசாங்கம் உறுதியாகக் கடைப்பிடித்தால், 2028 ஆம் ஆண்டளவில் இலங்கை நிம்மதிப் பெருமூச்சு விட முடியும்.

எனினும் இந்த இலக்குகளை அடையத் தவறினால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சர்வதேச நாணய நிதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 2023 ஆம் ஆண்டில் 950 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நிய நேரடி முதலீடுகளில் ஈர்க்க அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது, முன்னதாக 2019ல் 666 மில்லியன் டொலர்கள், 2020ல் 419 மில்லியன் டொலர்கள், 2021ல் 580 மில்லியன் டொலர்கள் மற்றும் 2022ல் 783 மில்லியன் டொலர்கள் ஆகிய வெளிநாட்டு முதலீடுகளின் மோசமான பதிவுடன் ஒப்பிடுகையில் 2023ல் 950 மில்லியன் டொலர்கள் சாதனை என்பது எளிதான காரியம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் செப்டம்பருக்குள், சர்வதேச நாணய நிதியக் கொள்கை மறுஆய்வுக்கு முன், அரசாங்கம் ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகள் அல்லது கடமைகளில் 77 சதவீதத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதையும் கொழும்பின் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button