கடும் வறட்சி – கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணம்
வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியான காலநிலையினால் 22,666 குடும்பங்களைச் சேர்ந்த 72,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ரீதியில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கையில் உள்ள அனைத்து மாகாணங்களையும் விட, வட மாகாணத்தில் அதிகளவான மக்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் மழை பெய்யாவிட்டால், இந்த பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீரின்றி தவிக்கும் அபாயம் இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறாக வடமாகாணத்தில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் அதிகளவாக யாழ்.மாவட்டத்தில் 05 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 21,714 குடும்பங்களைச் சேர்ந்த 69,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்றும் மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளது.அந்த மாவட்டத்தில் அமைந்துள்ள அனர்த்த முகாமைத்துவ நிலைய செயலகப் பிரிவில் 952 குடும்பங்களைச் சேர்ந்த 3244 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால் அங்குள்ள மக்கள் பெரும்பாலும் குடிநீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குடிநீருக்காக நாள் முழுவதும் போராட வேண்டியுள்ளதுடன், சில சந்தர்ப்பங்களில் நீண்ட தூரம் சென்று குடிநீரை பெறவேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரதேச செயலகங்கள் மற்றும் பாதுகாப்புத் திணைக்களங்கள் இணைந்து குடிநீர் தேவைப்படும் மக்களுக்கு நீர் விநியோகம் மூலம் நீரைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளன.