வந்து குவியும் சுற்றுலா பயணிகள்- இலட்சத்தை தாண்டிய எண்ணிக்கை
பொருளாதார ரீதியில் முடங்கிப் போயுள்ள இலங்கைக்கு தற்போது நம்பிக்கை தரும் வருமானம் என்றால் சுற்றுலா பயணிகளின் வருகையே ஆகும்.
அந்த வகையில் தற்போது சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து முப்பத்து ஒன்பது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். மூன்று வருடங்களுக்குப் பின்னர், அதிக எண்ணிக்கையிலான பயணிகள் ஜூலை மாதத்தில் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது கடந்த வருடம் இதே காலப்பகுதியில் வருகை தந்த பயணிகளை விட 202 சத வீத அதிகரிப்பாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் 7 இலட்சத்து 67 ஆயிரத்து 913 பேர் வருகை தந்துள்ளனர்.
அதேவேளை, இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் சராசரியாக நாளாந்தம் 180 அமெரிக்க டொலர்களை செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை எதிர்வரும் 2029 ஆம் ஆண்டளவில் நாளாந்தம் சராசரியாக 500 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.