வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட நெற்செய்கை: விவசாய அமைச்சு நடவடிக்கை
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியால் 37,000 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை நிலங்கள் அழிவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக குருநாகல் மாவட்டத்தில் 19,388 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ள நிலையில் குருநாகல் 22,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வறட்சியினால் 10,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு அழிவடைந்துள்ள நிலையில், உடவளவ நெற்செய்கைப் பிரதேசங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டாவது இடத்தில் உள்ளன.
இந்நிலையில் கமநல காப்புறுதி சபையின் தலைவர் டபிள்யூ.எம்.எம்.பி.வீரசேகர விவசாய அமைச்சுடன் இணைந்து தற்போது நாடளாவிய ரீதியில் வயல் நிலங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும் 25 குழுக்கள் பாதிக்கப்பட்ட நெற்செய்கை பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தலைமை அலுவலகத்திலிருந்து விசேட குழுவொன்று உடவளவ நெல் வலயத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.