News

அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள வவுனியா வைத்தியசாலை விவகாரம்

வவுனியா பொது வைத்தியசாலையில் கடந்த 4ஆம் திகதி சிசுவொன்றுக்கு சிகிச்சை அளிப்பதில் தாதியர் நடந்துகொண்ட விதம் மற்றும் தாதிய உத்தயோகத்தர்கள் தமது கடமையை சீராக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய வட மாகாண ஆளுனரின் உத்தரவின் போரில் மூவர் கொண்ட குழு வடமாகாண சுகாதார பணிப்பாளரால் கடந்த 15.08.2023 அன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் வட மாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவிக்கையில், குறித்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் உடனடியாக கள நிலவரங்களை தேடிப் பார்த்துள்ளோம்.

இதன்போது குறிப்பாக கூறப்பட்ட விடயம் என்னவென்றால், பாலூட்டும் தாய்மார் இருக்கும் பகுதியிலிருந்து பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் வீடியோ அழைப்பெடுத்து உறவினர்களுடன் கதைத்துள்ளார்.

இதனை தாதியர்கள் தடுக்க முயற்சித்த போது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கேள்விப்படுகின்றோம். இந்த விடயம் தொடர்பில் பூரண விசாரணை மேற்கொண்டு அதன்பின்னர் குறித்த அறிக்கையை சுகாதார அமைச்சின் சிபாரிசிற்கு அனுப்பி வைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் டிக்கட் வெட்டுவதில் ஏன் தாமதம் ஏற்பட்டது என ஊடகவியலாளர்கள் வினவிய போது, இது நடந்தது இரவு நேரம் என்ற படியால் தாதியர்கள் அனைத்து கடமைகளையும் நிறைவேற்றி அவர்களை உடனடியாக அனுப்புவதில் சிக்கல் இருந்ததாக கூறப்பட்டது. எனினும் இது தொடர்பாக முழுமையாக ஆராயப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் திகதி வவுனியா பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது உயிரிழந்த சிசுவின் தாய் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள குரல்பதிவில், வட மாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறும் விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என மறுத்துள்ளார்.

அத்துடன் தாதிமார்கள் வைத்தியசாலைக்கு வருபவர்களை மரியாதை குறைவாக நடத்தும் செயற்பாடு நடந்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதேவேளை அந்த தாய் மேலும் கூறுகையில், “நான் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் நான் தனியாக தான் இருந்தேன். என்னை பார்ப்பதற்கு ஒரு வைத்தியரும் இருக்கவில்லை. அப்போதிருந்த தாதிமார் யூடியூபில் படம் பார்த்துக் கொண்டும், வைபரில் வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டும் தான் இருந்தனர்.

நான் வைத்தியரை சந்திக்க வேண்டும் என கோரிய போதும் வைத்தியரை சந்திக்க யாரும் எனக்கு உதவி செய்யவில்லை. இறுதியாக 7 மணிநேரம் போராடி நான் பெற்ற குழந்தையும் இறந்து விட்டது. இது தொடர்பில் நான் முறைப்பாடு செய்துள்ளேன்.

அதேநேரம் வைத்தியசாலையில் வழங்கிய அறிக்கையின்படி பார்த்தால் என்னுடைய குழந்தை இறந்து பிறந்தது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் நான் போராடி எடுத்த அறிக்கையில் என் பிள்ளை பிறந்து 4 மணித்தியாலங்கள் உயிருடன் இருந்தது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button