கொள்கை முடிவுகளை எடுக்கும்போது அவற்றை நடைமுறைப்படுத்துவது அவசியம்
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் பொலித்தீன் பாவனையைத் தவிர்ப்பதற்காக பல சந்தர்ப்பங்களில் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்ட போதிலும், தற்போது நாளொன்றுக்கு ஒரு மில்லியனிலிருந்து 1.5 மில்லியன் மதிய உணவுத் தாள்கள்(லஞ்ச் ஷீட்கள்) இந்நாட்டின் மண்ணில் சேர்க்கப்படுவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர். டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் சுற்றாடல் பேண்தகைமைக்கான நிலையத்தின் சர்வதேச மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை மாநாடு, ‘காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நிலைத்தன்மைக்காக சுற்றுச்சூழல் முகாமைத்துவத்தை ஆராய்தல்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சுற்றாடலைப் பாதுகாப்பதற்கான கொள்கைத் தீர்மானங்களை எடுப்பதில் இலங்கை முன்னணியில் இருப்பதாகவும், ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“ஒரு குறிப்பிட்ட பொருளை தடை செய்ய கொள்கை முடிவு எடுக்கப்படும் போது அதற்கான மாற்று வழிகளை அறிமுகப்படுத்துவதில் நாடு என்ற ரீதியில் நாம் பின்தங்கிய நிலையில் உள்ளோம்.
இதனால் அதற்கான கொள்கை முடிவை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது.
2017 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஒருமுறை தூக்கி எறியும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கை தடை செய்ய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்ட போதிலும், இன்றும் அது உத்தேசிக்கப்பட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
20 மைக்ரானுக்கும் குறைவான மதிய உணவுத் தாள்களை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது, இன்றும் கூட சந்தையில் இருந்து தங்களின் தேவைக்கேற்ப அதனை வாங்க முடியும்.
கொள்கை முடிவுகளை எடுக்கும்போது அவற்றை நடைமுறைப்படுத்துவது முக்கியம்.
இந்த மதிய உணவுத் தாள்கள் ஒருமுறை மண்ணில் கலந்தால் அவை அழிவதற்கு சுமார் 100 முதல் 200 ஆண்டுகள் ஆகும்.
அத்துடன் அவை மைக்ரோ பிளாஸ்டிக்காக மாறி நீர் ஆதாரங்களுடன் கலப்பது மிகவும் ஆபத்தான நிலையை உருவாக்கும்.
இந்தியாவிலும் சீனாவிலும் காற்று மாசுபாடு பற்றி பேசப்பட்டாலும் இலங்கையில் அவ்வாறான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
எக்ஸ் பிரஸ் பேர்ல்(X-Press Pearl) கப்பலில், இலங்கை பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட தீயினால் ஏற்பட்ட அழிவுகள் தொடர்பில் இன்னமும் மதிப்பீடு செய்ய முடியாத நிலையே காணப்படுகிறது” என்றார்.