இலங்கையின் மானியத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ள இந்திய அரசாங்கம்
இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய அரசாங்கம், இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு மானியத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது.
அதன்படி, இந்தியா – இலங்கை உயர் தாக்க சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கட்டமைப்பின் கீழ் தற்போது செயற்படுத்தப்பட்டு வரும் ஒன்பது திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு 50 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒன்பது திட்டங்களுக்கான ஒட்டுமொத்த நிதி அர்ப்பணிப்பு, இந்த அதிகரிப்புக்குப் பின்னர் தற்போது 3 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்திய அரசாங்கம் HICDP கட்டமைப்பின் கீழ் இலங்கையின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய 60க்கும் மேற்பட்ட மானியத் திட்டங்களை நிறைவு செய்துள்ளது, அதே சமயம் 20 இதர திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
HICDP கட்டமைப்பு 2005 இல் இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது, பின்னர் ஒவ்வொரு முறையும் ஐந்தாண்டு காலத்திற்கு மூன்று முறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது.