லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் சாத்தியம்
விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிவாயுவின் விலை திருத்தத்தில் கணிசமான அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இதன்படி நாளை (04.09.2023) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பை கருத்திற்கொண்டு இந்த வருடம் இலங்கையில் எரிவாயு விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 4 ஆம் திகதி இடம்பெற்ற எரிவாயு விலை திருத்தத்தில், விலை அதிகரிக்கப்படவிருந்த போதிலும், நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு விலையை மீளாய்வு செய்யாமல் இருக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தற்போது 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 2,982 ரூபாய்க்கும், 05 கிலோ எரிவாயு சிலிண்டர் 1,198 ரூபாய்க்கும், 2.3 கிலோ எரிவாயு சிலிண்டர் 561 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
எரிவாயு விலை சூத்திரத்திற்கு அமைய, ஒவ்வொரு மாதமும் 5ம் திகதிகளில் லிட்ரோ எரிவாயு விலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
எனினும், கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி எரிவாயு விலைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.
இவ்வாறான நிலையில், கடந்த31.08.2023 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.