இடம் மாறும் ஆசிய கிண்ண போட்டிகள்?
கொழும்பில் கன மழை பெய்து வரும் நிலையில், அட்டவணையிடப்பட்டுள்ள ஆசிய கிண்ண போட்டியின் ஆட்டங்களை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.
எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் சூப்பா் 4 ஆட்டங்கள் மற்றும் இறுதி ஆட்டம் ஆகியவற்றை கொழும்பில் நடத்த அட்டவணையிடப்பட்டுள்ளது. ஆனால், அங்கு வானிலை மேம்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவே தெரிகிறது.
எனவே, ஆட்டங்களை அங்கிருந்து இடம் மாற்றுவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபையானது, போட்டியை நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, போட்டியில் பங்கேற்றுள்ள அணிகள் ஆகியவற்றுடன் ஆசிய கிரிக்கெட் சபைகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
கண்டி, பல்லேகலயில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வந்தாலும், அங்கும் மழை பொழிவுக்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.
பல்லேகலயில் இருந்து 70 கி.மீ. தொலைவிலிருக்கும் தம்புள்ளயில் மழைக்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும், குறுகிய காலத்தில் சூப்பா் 4, இறுதி ஆட்டங்களை நடத்தும் வகையில் அந்த மைதானத்தை தயாா் செய்ய இயலாதென இலங்கை சபை கருதுகிறது.
ஹம்பாந்தோட்டையில் உள்ள மைதானத்தில் அந்த ஆட்டங்களை நடத்த இலங்கை பரிசீலித்து வருகிறது. இன்னும் இரு நாள்களில் அது இறுதியாகலாம் எனவும் தெரிகிறது.