News

இலங்கையில் ஊடகவியலாளர்களைப் பதிவு செய்து வழங்கும் நிறுவனம் குறித்து வெளியான அறிவிப்பு.!

அரசாங்கத் தகவல் திணைக்களம் வழங்கும் ஊடக அடையாள அட்டை என்பது ‘ஊடகவியலாளர்’ அல்லது ‘செய்தியாளர்’ தங்கள் பணிகளைத் தடையின்றிச் செய்வதற்கு வழங்கப்படுவதே தவிர அது, அவன் – அவள் ‘ஊடகவியலாளர்’ அல்லது ‘செய்தியாளர்’ என்பதற்கான அங்கீகாரம் அல்ல.

பிரதான ஊடக நிறுவனங்கள் (Mainstream Media) வழங்கும் அடையாள அட்டைகள் மாத்திரமே அங்கீகாரத்துக்குரியது.

அல்லது ஊடக நிறுவனமாக இலங்கைக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டைகளும் செல்லுபடியாகும்.

ஆனால் எந்த ஒரு பதிவுமில்லாமல் ஊடக நிறுவனம் என்ற பெயரில் அல்லது தனிநபர் வியாபாரப் பதிவுடன் மாத்திரம் இயங்கும் நிறுவனங்கள் வழங்கும் ஊடக அடையாள அட்டைகள் செல்லுபடியற்றவை.

பல வலையொளி (You Tube) தொலைக் காட்சிகள் தனிநபர் வியாபாரப் பதிவுடன் இயங்குகின்றன.

வலையொளி தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள் எதுவும் ஊடகம் அல்ல.

அவை தனி நபர்களுக்குரிய உரிமை. அதற்கு ஒழுக்க விதிகள், கட்டுப்பாடுகள் இல்லை. இவை சமூக வரைமுறைகளை மீறுகிறதா இல்லையா என்பதை கூகுள் நிறுவனம் அவதானிக்கும்.

அதுவும் பத்துப்பேர் சேர்ந்து முறைப்பாடு செய்தால் மாத்திரமே.

பிரதான ஊடக நிறுவனங்கள் கம்பனியாகப் பதிவு செய்யப்பட்ட ஊடக நிறுவனங்கள் நடத்தும் வலையொளி (You Tube) தொலைக் காட்சிகள், ஊடகங்களுக்குரிய ஒழுக்க விதிகளுடன் இயங்குகின்றன.

தவறுகள் நடந்தால்கூட அவற்றை உரிய நிறுவனத்துக்கு அறிவித்து திருத்தம் அல்லது விளக்கம் கொடுக்க கூடிய பண்பும் இந்த நிறுவனங்களிடம் இருக்கும்.

எவ்வாறாயினும் ‘ஊடகவியலாளர்’ ‘செய்தியாளர்’ என்று பதிவு செய்ய அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனம் இலங்கைத்தீவில் எங்கும் இல்லை.

மருத்துவர்களை அங்கீகரிக்க இலங்கை மருத்துவர் சங்கம் உண்டு (Sri Lanka Medical Association – Ceylon Medical Journal- CMJ) பொறியியலாளர்களை அங்கீகரிக்கச் சங்கம் உண்டு (The Institution of Engineers Sri Lanka – IESL) கணக்காளர்களை அங்கீகரிக்கச் சங்கம் உண்டு (Sri Lanka Accountants Association) சட்டத்தரணிகளை அங்கீகரிக்கச் சங்கம் உண்டு ((Bar Association of Sri Lanka) ஊடகவியலாளர்களைப் பதிவு செய்ய இந்தியா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பிறஸ் ஒம்புட்ஸ்மன்ற் (Press Ombudsman) என்ற நிறுவனம் உண்டு.

இப்படி ஒன்றை உருவாக்குவது பற்றி நான் மற்றும் லக்ஸ்மன் குணசேகர உள்ளிட்ட சில மூத்த துறைசார்ந்த ஊடகவியலாளர்கள் இலங்கை இதழியல் கல்லூரியில் உரையாடியிருக்கிறோம்.

ஆனால் சாத்தியப்படவில்லை. சில பிரதான ஊடக நிறுவனங்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. அத்துடன் ஊடகவியல் பட்டப்படிப்புக் கற்றை இப்போதுதான் பல்கலைக்கழகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நான்கு வருடப் படிப்பைப் பூர்த்தி செய்து வெளியேறும் மாணவர்கள் பலரும் அந்தச் சான்றிதழைப் பயன்படுத்தி வேறு தொழில்களுக்குச் செல்கின்றனர்.

இதன் காரணமாக மருத்துவம், பொறியில், கணக்கியல், சட்டம் ஆகிய துறைகள் போன்று ஊடகத்துக்கு என்று பதிவு செய்யக்கூடிய அரச அங்கீகாரம் பெற்ற தனியார் அமைப்பு ஒன்றை உருவாக்க முடியாதுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (Sri Lanka Working Journalists Association) ”ஊடகவியலாளர்” ”செய்தியாளர்” என்பதற்குரிய அங்கீகாரத்தை வழங்கத் தகுதியுடைய சங்கம்.

ஆனால் ஊடகப் பணியில் உள்ள பலரின் அனுபவம், தகுதிகளைப் பரீட்சிப்பதில் (Professional) பல மனக் கஷ்டங்கள் அந்தச் சங்கத்துக்கு இருந்தது.

இதனால் இலங்கை ஊடகத் தொழிலாளர் சம்மேளனம் மாத்திரம் (The Federation of Media Employees Trade unions – FMETU) ஒவ்வொரு வருடமும் மீளவும் புதுப்பிக்கக்கூடிய வகையில் சர்வதேச ஊடகவியலாளர் தொழிற் சங்கச் சம்மேளனத்தின் (International Federation of Journalists – IFJ) அடையாள அட்டையைப் பெற்றுக் கொடுத்து வருகின்றது.

இது மாத்திரமே ஊடகத்துறை அங்கீகாரத்துக்கான தற்போதுள்ள ஒரேயொரு அடையாள அட்டை. ஆனாலும் இந்த அடையாள அட்டைகூட எல்லோரிடமும் இல்லை.

அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் எல்லோருமே அரசாங்கத் தகவல் திணைக்கள அடையாள அட்டையைப் பெற்றுள்ளனர்.

ஆனால் இவர்களுக்கு ஊடகவியலாளர் (Journalist) என்று குறிப்பிடப்பட்டிருப்பதில்லை. (இவர்களில் சிலர் உள்ளக செல்வாக்கின் மூலம் தங்களை ஊடகவியலாளர் என்று குறிப்பிட்டு ஊடக அடைய அட்டைளைப் பெற்றுள்ளனர்)

தமிழில் ஊடகவியலாளர்கள் என்பது பொதுச் சொல்லாகக் கருதப்படுகிறது. ஆனால் செய்தி (News) செய்தியுடன் கூடிய சமகால விவகாரங்கள் (Current Affairs) ஆகியவற்றில் ஈடுபடுவோர் மாத்திரமே செய்தியாளர்கள் (Journalist) என்ற வரையறைக்குள் அடங்குவர்.

அச்சு ஊடகங்கள் மாத்திரம் இருந்த காலத்தில் ‘பத்திரிகையாளர்’ என்று மாத்திரமே அழைக்கப்பட்டது.

பிற்காலத்தில் இலரத்திரனியல், இணைய ஊடகங்கள் தோன்றியதால் ”ஊடகவியலாளர்” என்ற சொல் தமிழில் அறிமுகம் செய்யப்பட்டது.

அறிவிப்பு மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், அதனுடன் தொடர்புடையோர் ‘ஊடகவியலாளர்கள்’ (Media Person) என்ற பொதுச் சொல்லாடலுக்குள் வரலாம்.

ஆனால் செய்தித்துறைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே செய்தியாளர்கள் (Journalist) என்று அழைக்கப்படுவர். வீடியோ எடுப்பவர் காட்சி ஊடகவியலாளர் (Video Journalist) படம் எடுப்பவர் படப்பிடிப்பு ஊடகவியலாளர் (Photo Journalist) என்று அழைக்கப்படுவர்.

பிரதான ஊடகம் ஒன்றில் செய்தியாளராக நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் உள்ள ஒருவர் செய்தி மற்றும் சமாகல விவகாரங்களை வலையொளி (You Tube) தொலைக் காட்சி ஒன்றை நடத்தினால் அவரிடம் நிச்சயம் ஊடக ஒழுக்கம் இருக்கும். அவரை செய்தியாளர் (Journalist) என்று அழைக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button